16 டெலிமெடிசின் ரோபோக்களை அறிமுகம் செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மாபெரும் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக 16 டெலிமெடிசின் ரோபோக்களை அறிமுகம் செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இது குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் பேசியதாவது - தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளுள் ஒன்றான மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்தியாவில் முதன் முறையாக 16 ரோபோக்களை மருத்துவப் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது.
இந்த டெலிமெடிசின் ரோபோக்கள் தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய சுகாதார வசதிகளுள் புதுமையான ஒன்றாகும். எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எங்கள் மருத்துவர்களுக்கு தேவையான திறனதிகாரத்தை இந்த ரோபோக்கள் வழங்கும். மேலும் உலகின் எந்த இடத்திலிருக்கும், மருத்துவத்துறையின் சிறப்பு வல்லுநர்களிடமிருந்து தேவையான நிபுணத்துவத்தை இப்போது நாங்கள் பெற முடியும். இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொலை மருத்துவம், சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள பிற கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகின்ற முயற்சியினை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்த ஊராடங்கு காலத்தின் போது, கொரோனா வைரஸுக்கு எதிராக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வழங்கப்பட்ட 6 - அடுக்கு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களிடம் கோவிட் அறிகுறிகளை கண்டறியவும், மருத்துவமனை வளாகங்களை தொற்று நீக்கி தூய்மைப்படுத்தவும், நோயாளிகளுக்கு மருந்துகளையும், உணவையும் வழங்கவும் ரோபோக்கள் திறம்பட பயன்பட்டிருக்கிறது என்றார்.