கண்ட இடத்தில் தொடுவார் - அரசு மருத்துவர் மீது 23 மாணவிகள் பாலியல் புகார்!
பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், துணைப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொந்தரவு
மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல்துறையின் துணைப் பேராசிரியராக இருப்பவர் செய்யது தாகிர் உசைன். இவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் உட்பட 23 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தில் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து, விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், 2 ஆசிரியர்கள், 1 நர்ஸ் மற்றும் 2 முதுநிலை மாணவிகள் உட்பட 23 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களைத் தவறான முறையில் தொடுவது, பாலியல்ரீதியாகப் பேசுவது, வர்ணிப்பது எனப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
சஸ்பெண்ட்
அதன் அடிப்படையில் விசாரித்ததில், பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானதால், அவரைப் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது. மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததால் என்னைப் பழிவாங்க, முறையான விசாரணை நடத்தாமல் இப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என பேராசிரியர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு, மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல்ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதன்முறை. இது போன்ற புகார்கள்மீது மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.