ஸ்டாலின் தாத்தா - முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பு நிதியை வழங்கிய சிறுவன்
ஸ்டாலின் தாத்தா..! கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு தான் சிறுக சிறுக உண்டியல் மூலம் சேர்த்து வைத்த 1000 ரூபாய் பணத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சிறுவன்.
கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன், தான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ள தோடு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் ஹரிஸ் வர்மன் கூறும்போது, "கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருசக்கர வாகனம் வாங்க சிறுக சிறுக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து போது இதுகுறித்து தனது அப்பாவிடம் தன்னிடம் உள்ள தொகையை கொண்டு உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன்.
உடனே அதற்கு தனது அப்பா ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தாத்தாவிற்கு சேமித்து வைத்த பணத்தை அனுப்பியதாக மழலை குரலில் கூறினான்.
மகனின் இந்த செயல் பற்றி சிறுவனின் தந்தை இளங்கோவன் பேசியதாவது, ”கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் நாள்தோறும் விளையாட்டு மற்றும் தொலைக்காட்சிகளில் கார்ட்டூன் உள்ளிட்டவைகளை பார்த்து வந்த ஹரிஸ்வரதன் சில நேரங்களில் எங்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் தொலைக்காட்சி செய்திகளில் வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தட்டுப்பாடுகள் நிலவி வருவது தொலைக்காட்சி மூலம் அறிந்தவன் இவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று என்னிடம் கேட்டான்.
உடனே அவனுக்கு ஆலோசனை வழங்கியபோது, தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து இதனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடுகளை சமாளிக்க உதவிட வழங்குமாறு கூறியதை அடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் தான் இருசக்கர வாகனம் வாங்க சிறுக சிறுக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.