பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - மக்கள் வெள்ளத்தில் மதுரை
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் உலகப் புகழ் பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15 ஆம் தேதியான நேற்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சி இம்முறை மக்கள் வெள்ளத்தில் நடைபெறுகிறது.
இதற்காக அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனம் மற்றும் தசாவதார நிகழ்வின்போது கள்ளழகர் எழுந்தருளும் கருட, சேஷ வாகனங்கள் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் சுந்தர ராஜப் பெருமாள் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து காலை 5.50 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கூடியுள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 40000 ஆயிரம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை, ஆற்றங்கரையோரம் இருந்து தரிசிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினால் விவசாயம், இயற்கை வளம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.