காப்பகத்தில் விற்கப்படும் குழந்தைகள் - கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக நாடகம்!
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இதயம் அறக்கட்டளை என்ற தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் கடந்த 29-ம் தேதி ஐஸ்வர்யா என்ற பெண்ணின் 1 வயது மகன் கொரோனாவால் உயிரிழந்ததால் மயானத்தில் உடலை எரித்து விட்டதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலியாக சான்றிதழ்களை தயாரித்து நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காப்பகத்தில் இருந்த அனைத்து குழந்தைகளை பத்திரமாக மீட்டு வேறொரு இடத்திற்கு மாற்றும் போது மேலும் ஒரு குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காப்பக நிர்வாகிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஜூன் 13-ம் தேதி 1 வயது ஆண் குழந்தை நகைக்கடை உரிமையாளரிடம் 5 லட்ச ரூபாய்க்கும், கடந்த 16-ம் தேதி பட்டறை தொழிலாளரிடம் 2 வயது பெண் குழந்தையை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அங்கிருந்த அனைவரையும் மீட்டு வேறு காப்பகத்திற்கு மாற்றியுள்ளனர். இது குறித்து
வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகிய நிர்வாகிகள், உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.