மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு - தடை விதித்த உயர் நீதிமன்றம்
மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யூடியூப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டார்
. இதுகுறித்து திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504 505 (1)b 505 ( 2)) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரிதாஸை கைது மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எத்தகைய கருத்தையும் பதிவு செய்யவில்லை. இந்த சூழலில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே ட்விட்டர் பதிவை செய்தேன்.
ஆகவே, இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் மனுவில்கூறி இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது பதிந்த முதல் தகவல் அறிக்கை செல்லாது என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, தேனியில் சிறையில் உள்ள மாரிதாஸ் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் மாரிதாஸ் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அவர் மீது அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையிலும் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.