மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடையில்லை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Indian Government Madurai High Court
By Thahir Jul 01, 2021 07:58 AM GMT
Report

தமிழ்நாடு முதலமைச்சருக்கு அல்லது அமைச்சர்களுக்கும் இப்படித்தான் பேச வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தற்போது அரசு அமைத்துள்ளது.திமுக புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது ஆகும் மேலும் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின்போது ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த முதலமைச்சர் "இந்தியா யூனியன் கவர்மெண்ட்" என்று அழைக்கப்படுவதால் அதை நாங்கள் ஒன்றிய அரசு என்று கூறுகின்றோம் இது ஒன்றும் சமூக விரோத குற்றமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது சட்டமன்றத்தை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதேபோல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலரிடம் மனு அளித்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே தமிழக அரசு "ஒன்றியம்"என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் மேலும் இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திய அரசை இந்தியா அல்லது பாரத் என்றே அழைக்கவேண்டும் ஒன்றியம் என்று அழைக்கக் கூடாது என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் கொரோனா தடுப்பூசி போடுங்கள் என நீதிமன்றம் மற்றும் அரசு பொது மக்களை வலியுறுத்தி வருகின்றது ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அல்லது போடாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை.

எனவே நீதிமன்றம் இந்தியாவை இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைப்பதற்கு தமிழக முதல் அமைச்சருக்கு மற்றும் அமைச்சர்களுக்கும் சட்டமன்றத்தில் இது தான் போச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது ஏனென்றால் இது அவர்களின் தனிப்பட்ட உரிமை.. என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.