திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
madurai hc warns tamilnadu govt to implement sc judgement on thiruparankundram deepam issue: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

கடந்த முறை மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, தொடரப்பட்ட வழக்கில், கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து நேற்று திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இங்கு விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்த நிலையில், இது பொருத்தமற்றது என நினைத்தால் நீங்கள் பேச வேண்டாம், ஆனால் நாங்கள் இதை எடுத்துக்கொள்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவில் உயர்நீதிமன்றம் எந்தவிதத்திலும் தலையிடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், அதே நேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கலாம் அல்லவா என கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என கேட்ட நீதிபதிகள், இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரித்ததோடு விசாரணையை 4 மணிக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட உச்சிபிள்ளையார் கோவிலிலே தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பங்குன்றம் செல்ல முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை தச்சநல்லூரில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.