சிறையில் உள்ள நண்பனை சந்திக்க இளைஞர் செய்த செயல் - அதிர்ந்த போலீஸ்
சிறையில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக இளைஞர் செய்த செயல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கார் எரிப்பு
மதுரை செல்லத்தம்மன் கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் தன் காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் சத்தம் கேட்டதையடுத்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, எரிந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், மதுரை கீழமாசிவீதியைச் சேர்ந்த சிவகுமார்(21) என்பவரை கைது செய்தனர்.
சிறை
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை, வடக்கு மாசி வீதி கருக்குவாலையன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷும்(26) சிவகுமாரும் நெருங்கிய நண்பர்கள். ஜூலை 29 ம் தேதி வாள் வைத்திருந்ததாக தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனால், ஒரு வாரமாக நண்பனை பிரிந்திருக்க முடியாமல் தவித்த சிவகுமார், சிறைக்கு சென்று அவரை பார்க்க நினைத்தார். அதனால் சில நாட்களுக்கு முன் தன்னையும் கைது செய்ய போலீசாரிடம் கெஞ்சினார். அதற்கு காவல் துறையினர் மறுத்துள்ள நிலையில், சிறை சென்று நண்பனை பார்ப்பதற்காக காரை தீயிட்டு கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.