"எனக்கே வழி விடமாட்டியா?” - அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய கார் உரிமையாளர்

madurai governmentbusdriverattacked
By Petchi Avudaiappan Nov 23, 2021 07:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரையில், வழிவிடாமல் சென்ற அரசுப் பேருந்தை மறித்த சொகுசு கார் உரிமையாளர், ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றூ முன்தினம் மாலை ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிந்தது. மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த இன்னோவா சொகுசு காரை ஓட்டி வந்தவர் விரைவாக செல்வதற்காக பலமுறை ஒலி எழுப்பியுள்ளார் 

ஆனால் சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றது. ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிறிது துாரத்தில், பேருந்தை முந்திச் சென்று காரை நிறுத்தி பேருந்தை மறித்துள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி, கல்லால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார்.

தொடர்ந்து காரில் இருந்து கம்பியை எடுத்து வந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனைத் தாக்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தனர். ஓட்டுநர் தாக்கப்பட்ட தகவல் பரவிய உடன் அடுத்தடுத்து வந்த அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களும் காரை ஓட்டி வந்தவரைத் தாக்க முற்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற எஸ். எஸ். காலனி காவல்துறையினர் ஓட்டுநரைத் தாக்கிய நபரைப் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. தனக்கு வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரை அவர் தாக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்; சுரேஷின் சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.