இரயில் பார்சலில் மதுபானங்கள் சிக்கிய மதுரை கும்பல்!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுபானக் கடைகள் ம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், இரயில் போக்குவரத்து இந்தியா முழுவதும் நடைபெற்று வருவதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதக் கும்பல், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் இரயில்கள் மூலமும், இரயில் பார்சல் சேவை மூலமும் மதுபானங்களைக் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில் இன்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் சந்திரசேகரன் இருவர் பெயரில் வந்த பார்சலை, இரயில்வே பார்சல் அலுவலகத்தில் சோதனை செய்த இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் 430 மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவற்றைக் கைப்பற்றிய இரயில்வே போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் தேடிச் சென்று கைது செய்து, வழக்குப் பதிந்து, மதுரை மாநகர் மதுவிலக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இனிவரும் காலங்களில் தொடர் சோதனையில் இரயில்கள் மூலம் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டால், கடத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.