அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் - ஓட ஓட விரட்டியடித்த விசிகவினர்!
மதுரை அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜகவினருக்கும், விசிகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்பேத்கரின் 130 பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தனர்.
இந்நிலையில் மதுரை புறநகர் பாஜக சார்பில், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அப்போது, அம்பேத்கர் சிலை அருகே நின்றுகொண்டிருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் சொல்வதை மீறி மாலை அணிவிக்க வந்தபோது, விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பாஜகவினரை விரட்டி அடித்தனர். பாஜகவினர் சாலையில் ஓடிய நிலையில், விடாமல் விரட்டி சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினர், பாஜக நிர்வாகிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினா். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனையடுத்து பாஜகவினரை அந்த பகுதியிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
மதுரையில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பாஜக - விசிகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் உண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.