மதுரை மக்களே உஷார்! கல்லூரி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு - 2 கோடி ரூபாய் நூதன மோசடி!
மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல கல்லூரியின் பெயரில் போலி முகநூல் கணக்கு துவக்கி 2 கோடி ரூபாய் நூதன கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல அன்னை பாத்திமா கல்லூரி இயங்கி வருகிறது. இதில் விமானப் போக்குவரத்து மேலாண்மை, விமான உணவக சேவை மேலாண்மை உள்ளிட்ட சிறப்பு இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தக் கல்லூரியின் பெயரில் முகநூலில், தனி கணக்கு உள்ளது. இந்த கல்லூரியின் தலைவர், ஜாஹிர் ஷா கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது அன்னை பாத்திமாக் கல்லூரி என்ற பெயரில், முகநூலில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு, சிலர் மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு செய்து பண மோசடியில் ஈடுபட்டு, தனது கல்லூரியின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும், அந்த மோசடி நபர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், அன்னை பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் மதுரை ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரும், கல்லூரி பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி, அதில் தொடர்பு கொள்ளும் மாணவர்களிடம் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 2 கோடி ரூபாய்க்கும் மேல் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிசி தமிழ்நாடு செய்திகளுக்காக மதுரையிலிருந்து செய்தியாளர் ஹமீது கலந்தர்...