ஒன்றிணைந்தனரா சகோதரர்கள்..? மு.க.அழகிரி வீட்டிற்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மதுரையில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டிற்கு 12 ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்லவுள்ளார்.
மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலின், தனது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வீட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009-ல் திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, மத்திய அமைச்சராக மு.க.அழகிரி இருந்த போது, மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அதன் பிறகு உட்கட்சி மோதல் காரணமாக அழகிரி வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக அவரது சகோதரர் வீட்டிற்கு செல்லவுள்ளார்.
நேற்று இரவு மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவர், இரவு தல்லாகுளம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நண்பகல் 12 மணிக்கு சகோதரரை சந்திக்கப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் சந்திப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இவர்களது சந்திப்பால் என்ன மாற்றங்களெல்லாம் நிகழ்ப்போகிறது என திமுக வட்டாரங்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஐபிசி தமிழ் செய்திகளுக்காக மதுரையிலிருந்து செய்தியாளர் மைதீன் ஷாகுல் ஹமீது