மதுரை சித்திரை திருவிழா; வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு..!
மதுரையில் கள்ளழகர் வையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த பொதுமக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.5 பேர் காயம்.
கொரோனா நோய் தொற்றால் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் உலகப் புகழ் பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15 ஆம் தேதியான நேற்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சி இம்முறை மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
இதனால் மதுரை மாநகரமே குலுங்கியது.இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் ஒருவர் ஆண் மற்றும் மற்றொருவர் பெண் என தெரியவந்துள்ளது.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்க 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.உயிழந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.