மக்களே உஷார்! போலி கார் பதிவெண் தயாரித்து கார் விற்பனை செய்யும் கும்பல் - 7 பேர் கைது!
மதுரையில் போலி கார் பதிவெண் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் உள்ள கார் கம்பெனியில் சில தினங்களுக்கு முன், விபத்தில் சிக்கிய ஒரு காரை பழுதுப் பார்க்கும்படி கூறி நிறுத்திச் சென்றனர்.
காரை பழுதுப் பார்த்த கம்பெனி நிர்வாகம், பதிவெண் மூலம் கார் உரிமையாளர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழரசனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, கார் சர்வீஸ் முடிந்துள்ளது, பில் தொகை கட்டி காரை எடுத்து செல்லும்படி தகவல் தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்ததும் தமிழழரசன் அதிர்ச்சியடைந்தார். கப்பலூர் கார் கம்பெனி அனுப்பிய கார் பதிவெண்ணும், அவரது மனைவியின் கார் பதிவெண்ணும் ஒன்றாக இருந்துள்ளது.
இதையடுத்து தனது மனைவியின் கார் பதிவெண் போல, போலி பதிவெண் தயாரித்து, மற்றொரு காரில் ஒரு கும்பல் சுற்றுவதாக மதுரை மாவட்ட எஸ்பியிடம் தமிழரசன் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டு கார் கம்பெனியில் காரை விட்டு சென்ற ஆரிப், சதீஷ் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை சென்னையில் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஆர்சி புக் அல்லது காரை திருடி விற்பனை செய்யும் கும்பல் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்தனர்.