மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை - செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
விபத்துப் பகுதியை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், ''இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளோம். விசாரணை முடிவடையும் வரை இந்த பாலப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்'' என்று கூறினார்.
இந்த நிலையில், மேம்பால கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேம்பால பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இயந்திரங்களை உரிய பாதுகாப்பில்லாமல் பயன்படுத்தியது, விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் இயந்திரங்களை வழங்கிய நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.