கோவில் திருவிழா நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை : மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் திருவிழா
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்டு 19 மற்றும் 20-ந் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
காவல்துறையின் அனுமதி தேவையில்லை
எனவே திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் தனது உத்தரவில், கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.