இன்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா - தயாராகும் மெகா விருந்து
மதுரை சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் திருவீதியுலா வந்தது.
சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இன்று காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் நடக்கிறது. இதற்காக காலை 7 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், அலைபேசி கொண்டு வரவ்யும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி உண்டு. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், அரசு அதிகாரிகள், ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் வடக்கு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லட்ச கணக்கான மக்களுக்கு உணவு அளிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு விருந்து அளிக்க சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியினை "பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்தர் சபை டிரஸ்ட்" என்ற தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது.
நேற்று இரவு துவங்கி இன்று மாலை 5 மணி வரைக்கும் வருகின்ற அனைத்து மக்களுக்கும் சுமார் 3500 கிலோ உணவு வழங்கப்படவுள்ளது. இந்த சமையல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களும், 800 கும் மேற்பட்ட சமையல் உதவியாளர்களும் என ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.