அம்மா உணவக சர்ச்சை - பூரி, வடை, சப்பாத்தி, ஆம்லெட் விற்பனை செய்து லாபம் ஈட்டியது அம்பலம்!
மதுரையில் அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஏழை, எளியோரின் பசியை போக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தான் அம்மா உணவகம். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட இந்த உணவகத்தில் மிக குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 அம்மா உணவகங்கள் இயங்கி வரும் நிலையில், மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் மற்றும் மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லெட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அம்மா உணவகத்தை இயங்கி வரும் மகளிர் சுய குழுவினர் தனது சொந்த செலவுக்காக பணத்தை எடுத்து செலவு செய்து வருவதாகவும், மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், விதியை மீறி அனுமதிக்கப்படாத உணவுகளை விற்றதால் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.