அம்மா உணவகத்தை ஹோட்டலாக மாற்றிய கவுன்சிலர்... டென்ஷன் ஆன மாநகராட்சி கமிஷனர்
மதுரை புதூரிலுள்ள அம்மா உணவகம் சர்ச்சையில் சிக்கிய நிலையில் மாநகராட்சி கமிஷனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அனைத்து நகரங்களிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இங்கு சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைவான விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய பயனாக அமைந்தது.
இதனிடையே தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் பெயர் பலகை அகற்றம் உள்ளிட்ட சில சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்பின் மதுரையிலுள்ள சில அம்மா உணவகங்களில் கலைஞர் கருணாநிதி படம் வைக்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது மாநகரிலுள்ள 10 அம்மா உணவகங்களையும் மாநகராட்சியின் கண்காணிப்பில் மகளிர் குழுக்கள் செயல்படுத்தி வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் அம்மா உணவகங்களை அந்தந்தப் பகுதி திமுக கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
அந்த வகையில் திமுக கவுன்சிலர் ஒருவர் புதூர் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு மாநகராட்சி அனுமதித்த உணவுகளுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தியும், மதியத்தில் வழக்கமான கலவை சாதத்துக்குப் பதிலாக சோறு, சாம்பார், ரசம், மோர், ஆம்லேட் என வழங்க உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகார் குறித்து உரிய விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் புதூர் அம்மா உணவகத்தில் விதிகளை மீறிச் செயல்பட்ட தகவல் வந்ததும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறொரு மகளிர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.