‘’அது வரும்...ஆனா வராது” - மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசின் அதிர்ச்சி பதில்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
பின் அதற்காக 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 ஜனவரி 27 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டுமான முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. எனினும், சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.
இதனிடையே திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ்க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் “தெரியாது” என பதிலளித்துள்ளது.