என் உயிருக்கு ஆபத்து உள்ளது... நான் பிரதமரை சந்திக்க போகிறேன்... - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

By Nandhini May 05, 2022 07:58 AM GMT
Report

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனையடுத்து, மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இத்தடை குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது.

தருமபுரம் ஆதீன மடத்துக்கு ஆளுநர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.

எனது குருவான தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது, நடத்துவோம். உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று எனக்கு மிரட்டல் வந்திருக்கிறது. இது குறித்து நான் பிரதமரை சந்திக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.    

என் உயிருக்கு ஆபத்து உள்ளது... நான் பிரதமரை சந்திக்க போகிறேன்... - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி | Madurai Adheenam