ஒன்றாக இணைந்த சைவம் - வைணவம் : பெருமைப்படும் மதுரை ஆதீனம்

By Petchi Avudaiappan May 09, 2022 08:27 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு மனம் மாறியது மகிழ்ச்சி என மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். 

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனிடையே இம்மாத இறுதியில் (மே 22) நடக்கவுள்ள தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்.

பதவியேற்ற நாளிலேயே இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சி எதிர்ப்பை மீறி நடந்தது. இதற்கிடையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த நிகழ்வை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  

இந்நிலையில் தான் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதற்கு ஆதீனங்கள், பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அளித்துள்ள பேட்டியில், எனது கோரிக்கையை ஏற்று அரசு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் என கூறி்யுள்ளார். 

இந்த விஷயத்தில் மன்னார்குடி ஜீயரை பாராட்டுகிறேன். மேலும் சைவ, வைணவம் ஒன்றுபட்டுள்ளது. அவர் இனி(அமைச்சர்கள் மிரட்டு வகையில் பேசியது) அதுபோன்று பேசமாட்டார். நான் எந்த கட்சிகளுக்கும் ஆதரவு, பிரசாரம் செய்வது இல்லை என ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.