அடுத்த பிறவியில் நீங்கள் பெருச்சாளிகளாக பிறப்பீர்கள் - சாபம் விட்ட மதுரை ஆதினம்

maduraiaadheenam templeleaseamount
By Petchi Avudaiappan Dec 10, 2021 04:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கோயில் குத்தகை பணம் தராதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் சாபமிட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை யாக பூஜைகள் தொடங்கின. 

இன்று இரண்டாம் கால பூஜை முடிந்து பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலைச்சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு தரிசனம் தர காலை 10 மணிக்கு மூலவர் ஜெகதீஸ்வரர் சுவாமி விமானக் கலசத்தின் மீது வேதமந்திரங்கள் முழங்க கலசநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது.

திருக்குட நன்னீராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் காரைக்குடி முன்னாள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். சொற்பொழிவில் பேசிய மதுரை ஆதினம், ‘தேசிய கொடி ஒரு சைவ கொடி. பச்சை நிறம் அம்பாளை குறிக்கிறது. சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் ரிஷபத்தை குறிக்கிறது.

ஆக மொத்தம் தேசியக்கொடி சைவக்கொடி. அதுமட்டுமல்லாமல் கோவில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள். இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி மட்டும் மூஞ்சில் எலியாக பிறக்க நேரிடும் சிவன் சொத்து குலநாசம்’ என்று தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.