சென்னை பல்கலைக்கழகத்தில் ஆடி வெள்ளி பூஜை - பெண்களை அழைத்து பூஜை செய்ய இது என்ன நித்தியானந்தா ஆசிரமா? முன்னாள் பேராசிரியர் கொந்தளிப்பு!
பெண்களை அழைத்து பூசை செய்ய இது என்ன சங்கர் பாபா பள்ளியா? ஆட்டம் போடும் ஆசிரமமா?நித்தியானந்தாவின் கைலாசா நாடா? என்று சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் மு.நாகநாதன் கொந்தளித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துணைவேந்தர் அலுவலகத்தில் பெண் பேராசிரியர்களை வரவழைத்துப் பூசை செய்துள்ளார் துணைவேந்தர் எஸ்.கவுரி. இதனால், துணை வேந்தர் கவுரிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
ஒரு மதம் சார்ந்த ஆடி வெள்ளிக்கிழமை பூசையை எல்லோருக்கும் பொதுவான பல்கலைக்கழகத்தில் நடத்தியிருப்பது, சட்டத்தின் விதிகள் மீறப்பட்டிருப்பதாகும் என்று முன்னாள் பேராசிரியர் மு.நாகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பெண்களை அழைத்துப் பூசை செய்ய இது என்ன சங்கர் பாபா தனியார் பள்ளியா? ஆட்டம் போடும் ஆசிரமமா? என்று கேள்வி எழுப்பும் நாகநாதன், துணைவேந்தருக்கு ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு இருக்கலாம். அது அவரின் தனியுரிமை. வேண்டுமானால் அவரது இல்லத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூசை செய்யட்டும்.
ஆனால், பல்கலைக்கழகத்தின் மதச்சார்பற்ற மாண்பினை அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராகச் சிதைப்பது பெரும் குற்றம் என்று கொந்தளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விதிகளை மீறிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருவது நேர்மையான கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.