‘விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது’ - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜயலட்சுமி என்பவரின் வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புலன் விசாரணையில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக புகார்கள் வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.