சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.
கடந்த டிசம்பர் 14 மற்றும் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நடைபெற்ற கொலீஜிய கூட்டத்தில்,
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார்.
கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
“வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நீதி நிர்வாகத்தில் தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீப் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து,
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜஸ்தானை சேர்ந்த முனீஸ்வர் நாத் பண்டாரி 2021 நவம்பர் 22-ம் தேதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.