திமுக அதிமுகவிற்கு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி
முக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக வழக்கு
2022 ஆம் ஆண்டு அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக பன்னீர்செல்வம் தரப்பினர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக அதிமுக
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி "கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது" என குறிப்பிட்டார்.
மேலும், "இரண்டு கட்சியினருக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை. உங்கள் வழக்குகளை விசாரித்தால் மட்டும் போதுமா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினர் அதே பணியில் இருக்கின்றனர். தேவையில்லாமல் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்படுகிறது என குறிப்பிட்டார்.
செல்லூர் ராஜு
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் போது பேசிய நீதிபதி, திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு கட்சிக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள் என பேசினார்.
அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜூவின் பேச்சில் எந்த அவதூறு இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.