பயிர்கள் அழித்ததை பார்த்தபோது கண்ணீர் வந்தது; 2 மாதம் காத்திருக்க முடியாத? என்எல்சிக்கு நீதிபதி கேள்வி!
நெய்வேலியில் பயிர்களை புல்டோசர்கள் கொண்டு அழித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
என்எல்சி வழக்கு விசாரணை
என்எல்சி நிர்வாகத்திற்கும் பணிக்கு வருகிற ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று என்எல்சி நிர்வாகம் தரப்பில் அவசர வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்னிலையில் மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் பணிக்கு அனைவரும் நிம்மதியாக வந்து கொண்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி. இந்த வழக்கு விசாரணையில் என்எல்சி தரப்பில் "20 ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கினோம். தற்போது அந்த நிலங்களை பயன்பாட்டிற்கு எடுக்கும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீதி மன்றங்களில் பயன்படுத்தும் விளக்குகள் மற்றும் ஏசி ஆகியவற்றுக்கும் என்எல்சியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தனர். இந்த கருத்துகளைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி என்எல்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கேள்வி
அதில் "பயிரிடப்பட்ட இடத்தில் புல்டோசர்களை வைத்து அழிக்கும் வீடியோக்களை பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்தது. 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் தற்போது பயிர்களை அறுவடை செய்யும் வரை உங்களால் காத்திருக்க முடியாதா? நிலத்தை எடுப்பதற்கு அதன் உரிமையாளர் என்ற முறையில் என்எல்சி நிர்வாகம் ஆயிரம் காரணம் கூறினாலும் பயிர்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு பயிர் சாதாரணமாக விளைந்து விடாது அது எளிதில் ஒரு மனிதனுக்கு கிடைத்தும் விடாது. ஒவ்வொரு மனிதனுக்கும், ஜீவ ராசிகளுக்கும் பயிர் என்பது உயிர் வாழ்வதற்கு முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பயிரை இழப்பீடு பெற்றுக் கொண்டார்கள் என்ற காரணத்திற்காக அழிக்கப்படுகிறதே என்ற கோபத்தை நீதிபதி வெளிப்படுத்தினார். மேலும் அரிசி மற்றும் காய்கறிகளுக்காக நாம் சண்டையிட்டுக்கொள்வதை விரைவில் பார்க்கத்தான் போகிறோம்,
அந்த நேரத்தில் இந்த நிலக்கரிகளெல்லாம் எந்த பயனையும் அளிக்காது. எனது கருத்துகளால் என்எல்சி நிர்வாகம் கோபமடைந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அழுத்தமான தனது கோபத்தை நீதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார்.