சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

district city Tiruppur
By Jon Mar 01, 2021 02:38 PM GMT
Report

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னல் ஆடை மற்றும் சாயப்பட்டறை தொழிற்சாலைகளின் கழிவுகளால் நொய்யல் ஆற்று படுக்கை மாசடைந்ததன் காரணமாக திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்ககள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1996 முதல் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த ஆலை உரிமையாளர்கள் ரூ.25 கோடியை டெப்பாசிட் செய்ய வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் ரூ.25 கோடி உயர்நீதிமன்ற வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இது தவிர அபராதமாக வசூலிக்கப்பட்ட ரூ.42.02 கோடி மற்றும் இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.7.64 கோடி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வசம் இருந்தது. தமிழக அரசும் இழப்பீடாக ரூ. 75 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்திருந்தது.

விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட இந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும், குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு மட்டும் இழப்பீடு கிடைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள 29,956 விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில் உயர்நீதிமன்ற வங்கிக் கணக்கில் உள்ள அந்த 25 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய கோரி கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செல்வகுமார் சார்பில் வழக்கறிஞர் கதிரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உயர்நீதிமன்ற வங்கி கணக்கில் இருக்கக்கூடிய ரூ.25 கோடியை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த இழப்பீடு கோரியுள்ள அனைவரது மனுவையும் பரிசீலனை செய்தபிறகு தகுதியான நபர்களுக்கு மே மாதம் 31-ம் தேதிக்குள் இழப்பீடு வழங்கி அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளார். இந்த உத்தரவின் மூலமாக சாயப்பட்டறையால் பாதிக்கப்பட்ட நொய்யல் நதியை ஒட்டிய திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.