இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

srilanka tamilnadu MadrasHighCourt
By Irumporai Mar 28, 2022 11:18 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளது என்ற ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.    

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அன்னிய நாட்டை இந்த நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது எனவும், மீனவர்கள் கைது அனுதாபம் தெரிவிக்க மட்டுமே முடியும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு யோசனை வழங்கினர்.

மேலும்,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.