கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் சட்டம் ரத்து - ஹைகோர்ட் அதிரடி
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பல பதிவுகளை பேஸ்புக்கில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டது.
அவரை கடந்த ஜூன் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள், நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் குறித்து அவர் அவதூறு பரப்புவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.
இதனால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது.
இதன் காரணமாக 1 வருடத்திற்கு அவர் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இச்சூழலில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கிஷோர் கே சுவாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் மாரிதாஸ் மீதான வழக்கையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.