தாமரை சின்னத்திற்கு எதிரான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொது நல வழக்கு
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில் "பாரதிய ஜனதா கட்சிக்கான தேர்தல் சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.
நீதிமன்றம் தீர்ப்பு
அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால்,
பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என சுட்டிக்காட்டப்பட்டது.
அதேசமயம் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் "வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து" உத்தரவிட்டுள்ளது.