இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஊரடங்கை அறிவித்த மத்திய பிரதேச அரசு
இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 60,000ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனையடுத்து, கொரோனா தொற்று 5 மாதங்களில் இல்லாத உச்சமாக நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 257 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.

நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிராவில் 35,952 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் ரத்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரம் 10ம் தேதி வரை அனைத்து அருங்காட்சியகங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கிறது.