நடிகை மதுவந்தி மீது ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டினால் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகளுமான மதுவந்தியும் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து மதுவந்தி பேசுகையில், ராஜகோபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதைவிட வேறு அசிங்கம் கிடையாது. அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளிதான் என் பாட்டியின் பாரம்பரியம். பாட்டி ஒஜிபி கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த பள்ளி கெட்டுப்போக விடமாட்டேன் என்று பேட்டி கொடுத்தார்.
மதுவந்தி வீட்டிற்கு சீல்
சமீபத்தில், சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட் வீடு வாங்குவதற்காக கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி கடன் வாங்கினார். இதனையடுத்து, சில மாதங்கள் தவணை கட்டினார். அதன் பின் தவணை பணம் கட்டாமல் இருந்து வந்தார்.
இதனையடுத்து, ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும், மதுவந்தி உரிய பதில் கூறாமல் இருந்து வந்தார். இதனையடுத்து, பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மதுவந்தியின் வீட்டை சீல் வைத்து சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகை மதுவந்தி மீது புகார்
இந்நிலையில், தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகியும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வழங்கிய பணத்தை திருப்பி கேட்டவர்களை அடியாட்கள் மூலம் தாக்கியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.