திரைப்படமாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாறு - இயக்கப்போவது யார் தெரியுமா?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவரது தலைமையிலான தமிழக அரசு அமைந்து ஓராண்டு நிறைவடையவுள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. இப்படத்தை கன்னி மாடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக முத்திரை பதித்துள்ள நடிகர் போஸ் வெங்கட் இயக்கவுள்ளார்.
இப்படம் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் உள்ளாக்கப்பட்ட நெருக்கடிகளை மையமாக வைத்தும், ஒரு தலைவனாக மு.க.ஸ்டாலின் உருவாக காரணமாக நிகழ்வுகளோடும் இந்த திரைப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதை எழுதும் பணிகளை அஜயன் பாலா மேற்கொண்டுள்ளதாகவும், மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக படக்குழு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும், சமுத்திரக்கனி இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.