"மேட் இன் தமிழ்நாடு" என்பதை உருவாக்க முதல்வர் பாடுபடுகிறார் - அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு.!
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக,
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கச்செய்யும் வகையில் 40 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 130க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு . வேலை வேண்டுவோருக்கும், வேலை தேடுவோருக்கும் பாலம் என்ற திட்டத்தை சிறப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார்.
அதேபோல அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவிகள் தொழிற் கல்வி படிக்கச் சென்றால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
"மேட் இன் தமிழ் நாடு" என்பதை உருவாக்க தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அதே போல "மேட் இன் கரூர்" என்ற நிலையை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என்றார்.
மாணவர்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கும் நல்ல திட்டங்களை கொண்டு தமிழக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாநகர மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.