" Made in India' போல 'Made in Tamilnadu' என சொல்லும் நிலை வரவேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
‘Made in India’ என்பதை போல ‘Made in Tamilnadu’ என சொல்லும் நிலை வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” தமிழக தொழில் துறையில் உலகம் இருக்கும் வரையில் இலக்கு இருக்க வேண்டும். உலக வர்த்தக சூழலுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம், ஆரணி ,சின்னாளப்பட்டி சேலைகள் உட்பட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் மின் சார்ந்த ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
ஏற்றுமதியை அதிகரிக்க தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்படும்.தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், தோல் உற்பத்தி பொருட்கள் அதிகம்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ” Made in India’ என்பதை போல ‘Made in Tamilnadu’ என சொல்லும் நிலை வரவேண்டும். 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.