இணையத்தை கலக்கும் யுடியூபர் மதன் கவுரியின் பாத்ரூம் பாடல்!
பிரபல யுடியூபரான மதன் கவுரி 'அட்டி கல்ச்சர்' எனும் சென்னையைச் சேர்ந்த இசைக்குழுவினருடன் இணைந்து பாத்ரூம் பாடல் என்ற பெயரில் ஒரு ஜாலியான பாடலை பாடி வெளியிட்டுள்ளார். அது 16 லட்சம் பார்வையாளர்களை கடந்து யுடியூபில் டிரெண்டிங் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

மதுரையில் வளர்ந்து அமெரிக்காவில் முதுகலை படித்து திரும்பிய இவர், யுடியூபில் 50 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளார். சமூக பிரச்னைகள், வரலாறு, அறிவியல் போன்ற சிக்கலான விஷயங்களையும் எளிய முறையில் விவரித்ததால் பரவலான கவனம் பெற்றார்.
தற்போது 'அட்டி கல்ச்சர்' என்ற சென்னையைச் சேர்ந்த இசை குழுவினருடன் மதன் கவுரி, அசல் கோலார், துரை, ஆப்ரோ ஆகியோர் வரிகள் எழுதி, கென் ராய்சன் என்பவர் இயக்கத்தில் பாத்ரூம் பாடலை வெளியிட்டுள்ளனர். முழுக்க ஓட்டல் அறையிலேயே படமாக்கப்பட்டுள்ள இப்பாடல் 'மாட்டுத்தாவணி டூ மன்ஹாட்டன் ஜோ பைடன் முப்பாட்டன்' என தங்கிலீஷில் ரைமிங்காக ஆரம்பித்து அப்படியே செல்கிறது. அரசியல், ஆன்லைன் வகுப்பு, ஓ.டி.டி.,யை எல்லாம் தொட்டியிருக்கிறார்கள். பைடன், எலான் மஸ்க், வாரன் பப்பெட் பெயர்களை எல்லாம் தூவி இறுதியில் 'எல்லாமே நம் நேஷன் எல்லாரும் ரிலேஷன்' என்ற கருத்துடன் முடித்திருக்கிறார்கள்.
24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பாடலை பார்த்துள்ளனர். 2 லட்சம் பேர் லைக்ஸ் இட்டுள்ளனர். 11 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்ள்ளனர். மதன் கவுரி கடந்த ஆண்டு ரேப் பாடகரான தெருக்குரல்
அறிவுடன் இணைந்து 'மங்கி வித் 5ஜி' என்ற அனிமோஜி பாடலை தனது சேனலில் வெளியிட்டிருந்தார். அது 11 லட்சம் பார்வைகளை பெற்றது. தற்போது பாத்ரூம் பாடல் ஒரே நாளில் அந்த எண்ணிக்கையை தாண்டியுள்ளது.