சிம்புக்கு நேர்ந்த சிக்கல்.. ஓடோடி வந்து கைக்கொடுத்த உதயநிதி : மாநாடு ரிலீசானதின் பின்னணி இதுதான்

udhayanidhistalin maanaadu actorSTR
By Petchi Avudaiappan Nov 24, 2021 06:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

மாநாடு படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் சிம்புவின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள  இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ்,, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே திடீரென நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘படம் நாளை ரிலீஸ் ஆகாது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

சிம்புக்கு நேர்ந்த சிக்கல்.. ஓடோடி வந்து கைக்கொடுத்த உதயநிதி : மாநாடு ரிலீசானதின் பின்னணி இதுதான் | Maanaadu Movie Issue

இதனைத் தொடர்ந்து  படம் வெளியாவதில் என்ன பிரச்னை என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியில் நேற்று இரவு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தியேட்டர்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன. 

இதற்கிடையில் சிம்பு நடித்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ‘படப்பிடிப்புக்கு சிலம்பரசன் சரியாக வராததுதான் படத்தின் நஷ்டத்துக்குக் காரணம்’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிலம்பரசன் கொடுக்க வேண்டும். அதுவரை வேறு படங்களில் அவர் நடிக்க தடைவிதிக்க வேண்டுமெனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதையொட்டி இருதரப்பும் வாக்குவாதங்கள் நடந்தவண்ணம் இருந்த நிலையில்  மைக்கேல் ராயப்பன் தரப்பால்தான் மாநாடு படத்துக்கு சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இம்முறை மைக்கேல் ராயப்பனை ‘மாநாடு’ பட தயாரிப்புத் தரப்பு முன்கூட்டியே சரிசெய்துவிட்டது. அடுத்ததாக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்தவர்களில் முதன்மையானவர், உத்தம் சந்திடம் படத்தின் தயாரிப்பு செலவுக்காக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வாங்கிய பணத்தை ரிலீசுக்கு முன்பு தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் நினைத்தபடி பிசினஸ் முடியாததால் அவரால் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே தான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் வேறு வழியின்றி, ‘படம் வெளியாகாது’ என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

சிம்புக்கு நேர்ந்த சிக்கல்.. ஓடோடி வந்து கைக்கொடுத்த உதயநிதி : மாநாடு ரிலீசானதின் பின்னணி இதுதான் | Maanaadu Movie Issue

தயாரிப்பாளரின் இந்த ட்வீட்டைக் கண்டு திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். காரணம்  தமிழ்நாடு தியேட்டர் உரிமம் சுமார் ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. குறித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும்  என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் சோனி நிறுவனம் 10.5 கோடி ரூபாய்க்கு ‘மாநாடு’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருந்தது. அதன்பேரில் பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் பணம் கடனாகக் கொடுத்து உதவியிருக்கிறார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சிம்புவுக்கு உதவும் விதமாக, படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வைத்திருக்கிறார். மேலும், சிம்பு படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்துவரும் `வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.

‘தன் மகன் படம் ரிலீஸ் ஆவது கௌரவப் பிரச்னை’ என்று சொல்லி, இன்னும் 3 கோடி ரூபாயை படத்திற்கு சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தருவதாக ஒப்புக் கொண்டதால், கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை அதிகாலையே ரிலீஸாகிறது’ என தகவல் வெளியாகியுள்ளது. 

You May Like This