தனியார் மருத்துவமனைகளில் கொள்ளைக்கு முடிவு - அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. ஆனாலும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை என்றும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பேரிடர் சூழலை தவறாகப் பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீதும் - தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீதும் நோயாளிகள் இறக்க நேரிடும்போது தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

