15 கிலோமீட்டர் நடந்தே சென்று மக்களை சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மலை கிராமங்களுக்கு 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வந்ந நிலையில் நேற்று இரவு அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேற்று இரவு கிருஷ்ணகிரியில் உள்ள பெட்ட முகிலாலம் ஊராட்சியில் உள்ள கோட்டையூர் கொல்லை என்ற மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் தங்கினார்.
இதனையத்து இன்று காலை மூக்கனாங்கிரி என்ற மலை கிராமத்திற்கு சென்று அங்கு பொதுமக்களை கண்டு குறைகளை கேட்டறிந்த நிலையில் அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடைபயணமாக சென்று கடமகுட்டை மற்றும் கல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் மா சுப்பிரமணியன் சுகாதாரத்துறை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஒவ்வொரு மலை வாழ் கிராமத்திற்கு செல்லும் போதும் அங்கு பொதுமக்கள் கேட்கும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
நேற்று இரவு காமகிரி என்ற கிராமத்தில் ஆய்வு செய்தபோது அங்கு உள்ள மக்கள் சிகிச்சைக்காக சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வரும் பத்து நாட்களில் உங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்தார். இன்று காலை நடைபயணமாக கோட்டங்கரை என்று கிராமத்திற்கு சென்ற போது அங்கு இளைஞர் ஒருவர் எருது விடும் விழாவில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும் தனக்கு வாழ்வாதாரம் கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்த நிலையில் அவருக்கு செயற்கை கால் கிடைக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அமைச்சர் உடனடியாக செய்து கொடுத்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்புத் திட்டம் அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால்
துவக்கி வைக்கப்பட்ட உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக கேட்டறிந்து வருகிறார்.