சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான “மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவை” வாகனங்கள் மற்றும் கண் மருத்துவ உபகரணங்களை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது -
பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவைக்காக 90 லட்சம் ரூபாய் செலவில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து கிராமபுறங்களிலும் சென்று மக்களுக்கு கண் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படும்.
மக்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 42 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட 1.19 சதவீத முதியோர்களுக்கு இந்தியாவில் பார்வை குறைபாடு உள்ளது.
கிராமபுறங்களில் கண்புரை பாதிப்பு, சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, நீர் அழுத்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இதேபோன்று மேலும் பல வாகனங்கள் விரைவில் தொடங்கிப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சென்னை குடிசைப்பகுதியில் 32 சதவீதம் பேர் தான் முக கவசம் அணியும் தகவல் வருத்தம் அளிக்கிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தனியார் விடுதி நிர்வாகங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான எந்த ஒரு விளம்பரமும் இதுவரை வெளியிடவில்லை.
எங்களுடைய அறிவுறுத்தல்களை, கட்டளையாக ஏற்று அவர்கள் செயல்படுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.