விமான சாகச நிகழ்வு; 5 பேர் உயிரிழப்புக்கு காரணம் இதுதான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மெரினா விமானப்படை சாகசம்
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன், இந்தியாவின் விமானப்படை கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது. இது முழுக்க முழுக்க இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி.
அதனால் அவர்களையும் நாம் குறைசொல்லிவிட முடியாது. வெயில் இருக்கும் என்று தெரிந்துதான் தொப்பி, கண்ணாடி அணிந்து வாருங்கள் என்று முன்பே அறிவுறுத்தியிருந்தார்கள்.
மருத்துவ வசதி இல்லையென்று சொல்லமுடியாது. காரணம் மெரினாவுக்கு அருகே தான் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
உயிரிழப்புக்கு காரணம்
வெயில் தாக்கமும், நீர்ச்சத்து குறைபாடும்தான் உயிரிழப்புக்கு காரணம். இறந்தவர்கள் 5 பேரும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இறப்பு யாரும் எதிர்பார்த்து நடக்கவில்லை. அனைவரும் வருந்துகிறோம். அனைவரும் அனுதாபம் தெரிவிக்கிறோம். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தோற்றுவிடுவார்கள். இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்" என பேசியுள்ளார்.