இருமல் மருந்து இறப்பு விவகாரம் - சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இருமல் மருந்து இறப்பு குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
இருமல் மருந்து இறப்பு
மத்தியப்பிரதேச மாநிலத்தில், இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில் கோல்ட்ரிஃப் என்கிற இருமல் மருந்தை உட்கொண்டதில் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த மருந்தில், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததன் காரணமாக தான் குழந்தைகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
இந்த கோல்ட்ரிஃப் மருந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஶ்ரீ சென் பார்மா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டதோடு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருமல் மருந்து இறப்பு குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அமைச்சர் விளக்கம்
இது தொடர்பாக விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சர்ச்சைக்குரிய மருந்து நிறுவனத்திற்கு 22.10.2011 அன்று உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பு குறித்து தெரியவந்ததும் சர்ச்சைக்குரிய இருமல் மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய இருமல் மருந்து அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை ஸ்ரீசன் பர்மா நிறுவனத்தின் COLDRIF இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.
2019 முதல் 2022ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவணங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்திலுள்ள 397 மருந்து உற்பத்தி நிறுவனங்களில், திரவ நிலை மருந்து (Syrup) தயாரிக்கும் 50 மருந்து நிறுவனங்களில் கடந்த ஒரு வாரத்தில் முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் மேலும் 52 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.