தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி யாருக்கெல்லாம்?- அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழ்நாட்டில் விரைவில் இலவச புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்ரமணியன்
சென்னையில் தனியார் அமைப்பு நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயண நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகிய 3 புற்றுநோய்கள் பெண்களை அதிகளவில் தாக்குகிறது. உலகளவில் 1 லட்சம் பேரில் 58 பேருக்கும், இந்த இந்தியளவில் 28 பேருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்களை ஆரம்பக் கட்டத்திலே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்தி விடலாம். போலியோ அங்கங்கே தலைதூக்குவதாக அச்சம் எழுந்தது. தற்போது போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இலவச புற்றுநோய் தடுப்பூசி
அதே போல், 1 முதல் 14 வயதுடைய பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.38 கோடி நிதி ஒதுக்கி அனுமதி தந்து இருக்கிறார்கள்.

தற்போது டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. டெண்டர் முடிந்ததும் தடுப்பூசிகள் போடப்படும். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இந்த இலவச தடுப்பூசி போட உள்ளோம்.
இதனை தனியார் மருத்துவமனைகளில் சென்று செலுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.15,000 ஆகும். இதே போல் கொரோனா தடுப்பூசியையும் நாம் இலவசமாக செலுத்த தொடங்கினோம்.
அதன் பின்னர் இந்தியா முழுவதும் இலவசமாக செலுத்தப்பட்டது. அதே போல், இலவச புற்றுநோய் தடுப்பூசிக்கும் நாம் அடித்தளமிட்டுளோம் என பேசினார்.