மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர் - யார் இந்த எம்.ஏ. பேபி?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வதுஅகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அகில இந்திய மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமர்வில் கருத்தரங்குகள் நடைபெற்றன. மாநில உரிமை குறித்த கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி கடந்த ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து, பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார்.
எம்.ஏ. பேபி
இந்நிலையில், மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற்றது.
இதில் கேரளாவை சேர்ந்த எம்.ஏ. பேபி(M.A.Baby) பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
கட்சியின் 6வது பொதுச்செயலாளரான இவர், கேரள மாநிலத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
மேலும், இ.எம்.எஸ் நம்பூதிரியாட்க்குப் பிறகு கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்படும் 2வது அகில இந்திய பொதுச் செயலாளர் ஆவார்.