தோனியை வியக்க வைத்த தமிழக வீரர் - அடஅவரோட எதிர்காலம் இப்பவே தெரியுதே..!
சையது முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய தமிழக அணி வீரர் ஷாருகான் மீது தோனியின் கவனம் விழுந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான சையது முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் விளையாடிய கர்நாடக அணிக்கு எதிராக டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா 20 ஓவர்களில் கர்நாடகா அணி 151 ரன்கள் குவித்தது.அதிகப்பட்சமாக அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் விளாசினர். இதனையடுத்து 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணி தொடக்கத்தில் வேகமாக ரன்களை சேர்த்தபோதும், மிடில் ஆர்டர்களில் ரன் சேர்க்க தவறினர்.
இப்படிபட்ட இக்கட்டான சூழலில் களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான் கர்நாடகா அணி பந்துவீச்சை விளாசித்தள்ளினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. மிகவும் அழுத்தமான சூழலின் போது தமிழகம் வெற்றி பெறாது என ரசிகர்கள் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் நம்பிக்கை நாயகனை போன்று கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்ஸரை விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார்.
அவர் 15 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தமாக 33 ரன்களை சேர்த்தார். அவரின் அந்த ஆட்டம் இந்திய அணியிலேயே இடம் பெற வைக்கும் என முன்னாள் வீரர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் ‘வாத்தியார்' எம்.எஸ்.தோனியின் பார்வையில் ஷாருக்கான் பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி இறுதிப்போட்டியை தோனி தொலைக்காட்சி மூலம் பார்த்துள்ளார். அதில் ஷாருக்கான் அடித்த கடைசி சிக்ஸரை பார்த்து அவர் வியப்படைந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் வரும் காலத்தில் இந்திய அணியில் ஷாருக்கான் இடம்பெற வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.