'விசாரணைக்கு எல்லாம் ஆஜராக முடியாது' - அடம் பிடிக்கும் முன்னாள் அமைச்சர்
லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாகவும்,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து
விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும்,எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்,55% வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று காலை 10.30 மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால்,உள்ளாட்சி தேர்தல் பணி காரணமாகவும்,தேர்தல் பிரச்சாரம் காரணமாகவும் தன்னால் நேரில் ஆஜராக இயலாது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்,லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.